தூத்துக்குடி: தூத்துக்குடி - இலங்கை காங்கேசன் துறைமுகம், தூத்துக்குடி - கொழும்பு துறைமுகம், ராமேஸ்வரம் - தூத்துக்குடி - கன்னியாகுமரி இடையே விரைவில் கப்பல் போக்குவரத்தை தனியார் நிறுவனம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பல்வேறு வளர்ச்சிகளை பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை மையமாக வைத்து பல்வேறு இடங்களுக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்காக தனியார் நிறுவனம் முன் வந்துள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சிறிய வகை கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன்படி இரண்டு நிறுவனங்கள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், அந்த நிறுவனத்தினர் இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாகவும் துறைமுக அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி, தூத்துக்குடியில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கும், தூத்துக்குடி - கொழும்பு துறைமுகம், ராமேஸ்வரம் - தூத்துக்குடி - கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு கப்பல் சேவை தொடங்குவதற்காக துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துடன் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் மும்பையில் நடந்த (International Maritime India Summit 2023) சர்வதேச கடல்சார் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஸ்கோடியா பிரின்ஸ் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. அப்போது, தூத்துக்குடியில் இருந்து லுங்கிகள் உள்ளிட்ட ஆடைகளை அங்கு கொண்டு சென்று, அங்கிருந்து சோப்பு, தேநீர் மற்றும் மசாலா பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டும் வரப்பட்டன.
இதனால் வர்த்தகம் சிறப்பாக இருந்ததாகவும், பலர் பயன்பெற்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் திரும்பவும் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் பட்சத்தில் வணிகம் மற்றும் சுற்றுலாவுக்கு ஊக்கம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து துறைமுக வட்டாரங்கள் தெரிவித்ததாவது, "தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் (Kankesanthurai, KKS) உள்ளிட்ட இடங்களுக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. 300 பயணிகளை கொண்டு இந்த கப்பல் இயக்கப்பட உள்ளது.
இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் அந்த கப்பல் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வந்து சேரும். உடனடியாக தூத்துக்குடியில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கும், அதனை தொடர்ந்து கொழும்பு, ராமேஸ்வரம் - தூத்துக்குடி- கன்னியாகுமரிக்கும் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ககன்யான் சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது..!