தூத்துக்குடி: பாஜக சிறுபான்மை அணியின் மாநில அளவிலான மூன்று நாள் பயிற்சி முகாம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் தொடங்கியது. இதில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் ஜான் பர்லா கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பர்லா, “இன்று மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் சிறுபான்மையினரும் அதிக அளவில் பயன் பெற்று வருகின்றனர்.
சிறுபான்மையினருக்கான கல்வி திட்டங்களில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் பங்கெடுத்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் கல்வி ரீதியாக முன்னேற்றத்திற்கு பல தடைகள் உள்ளன.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக சிறுபான்மையினர் மேம்படுவதற்கான நடவடிக்கையை திமுக அரசு மேற்கொள்ளவில்லை. திமுக அரசு மத்திய அரசின் மீது உள்ள வெறுப்பின் காரணமாக சிறுபான்மையினருக்கான சமூக கூடங்கள், விளையாட்டு திடல்கள், மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகள் உள்ளிட்ட பல திட்டங்களுக்காக கிடைக்க வேண்டிய நிதியை பெற்றுத் தர தடையாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி எல்லோருக்குமான வளர்ச்சி, எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கோடு பயணித்து வருகிறார். அதன் காரணமாக நாடு இன்று மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. சிறுபான்மை மக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்தும் திமுகவுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத்திற்கான தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே சிந்தனை உள்ள அரசை எதிர்பார்க்கிறார்கள். பிரதமர் மோடி வந்த பிறகு நாட்டில் பிரிவினைவாதம் என்பதற்கு இடமில்லை.
பங்களாதேஷ், பாகிஸ்தான் என பல நாடுகள் பிரிவதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ், ஒற்றுமை யாத்திரை நடத்துவதால் எந்த பலனும் இல்லை. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆனால் மீனவர்களுடைய உரிமையை பறிக்கும் வகையில் இலங்கை அரசு அவர்களுடைய படகுகளை பிடிப்பதும், அவர்களை கைது செய்வதும் தொடர் கதையாக உள்ளது.
தொடர்ந்து மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரதமரின் கவனத்தில் கொண்டு செல்லப்பட்டு மீனவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இலங்கை அரசால் பிரிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் மீன் பிடி படகுகள் அனைத்தும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
இந்நிகழ்வில் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், சிறுபானமையினர் பிரிவு மாநில தலைவர் டாக்டர் டெய்ஸி தங்கையா, மாநிலச் செயலாளர் அசோகன், மாநில பொதுச் செயலாளர்கள் தியாகராஜ், சதீஸ் ராஜா மற்றும் ஜெபராஜ் ஆகியோர் இருந்தனர்.
இதையும் படிங்க: சமூக நல்லிணக்க பெரியாரே... பிரதமர் மோடியை வாழ்த்தி பாஜகவினர் போஸ்டர்