தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேவுள்ள மணிநகர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வசந்தி. இவர் கொம்மடிக்கோட்டையிலுள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தினமும் தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம். அதேபோல் நேற்று (அக்.20) வழக்கம்போல அவர் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, அடைக்கலாபுரம் அருகில் வந்தபோது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வசந்தியை வழி மறித்து அவர் கழுத்திலிருந்த நகையை பறிக்க முயன்றனர். உடனே அவர் கூச்சலிட்டதையடுத்து, அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்தனர்.
பின்னர், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் பிடித்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் நெல்லை மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த துரை மகன் முருகன் (31), பூதத்தார் மகன் கதிர்வேல் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது.
நாகர்கோவிலிருந்து உடன்குடியிலுள்ள உறவினரை பார்க்க வந்தபோது பெண்ணை வழி மறித்து நகை பறிக்க முயன்றதாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.