ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், பல்வேறு பகுதிகளில் மக்கள் சாராயம் காய்ச்சியும், சாரய ஊறலை தயார் செய்தும் வருகின்றனர். இதனை காவல் துறையினர் அழித்தும், உரியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர்.
25 லிட்டர் ஊறல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த வடக்கு இலந்தைக்குளத்தில், கயத்தாறு காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் பால், காவலர்கள் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வூருக்கு வடக்கே உள்ள சின்னச்சாமி என்பவருடைய தோட்டத்தில் அதே ஊரைச் சேர்ந்த வெயில்கனி (37), காளிராஜ் (19) ஆகிய இருவரும் பழங்களை வைத்து சாராய ஊறலை தயார் செய்து, அதில் சாராயம் வடிப்பதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனே, காவல் துறையினர் மேற்படி 25 லிட்டர் ஊறலை பறிமுதல்செய்து, மேலும் அதற்குரிய தளவாட சாமான்களை கைப்பற்றி மேற்படி இருவரையும் கைதுசெய்தனர். இதுகுறித்து, கயத்தாறு காவல் ஆய்வாளர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.