அசைவ உணவுகளில் மிகச்சிறந்த உணவு மீன் என்பார்கள். உடலுக்கு தேவையான வைட்டமின்களை நிறைவுற வழங்குவதில் மீன் உணவுகள் முன் வரிசையில் உள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சிறியவர் முதல் பெரியவர்கள் வரையிலும் விரும்பி உண்ணப்படும் உணவு வகை பட்டியலில் மீன் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். குழந்தைகளின் உடல் வளர்ச்சி, கண் பார்வை, உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகளை வழங்குவதற்காக மீன் உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மீன்கள் பொதுவாக குழம்பாகவும், வறுவலாகவும் பரிமாறப்படுகின்றன. இதுதவிர கருவாடும் மீன் உணவுகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மீன்களை பதியமிட்டு வெயிலில் உலர்த்திய பின்னர் நெடு நாள்களுக்கு சேமித்து வைத்து பயன்படுத்துவதுதான் கருவாடு. இவற்றில் நிறைய வகைகள் இருந்தாலும் மாசிக்கருவாடுக்கு சந்தைகளில் எப்போதுமே மவுசு அதிகம். இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் மாசி கருவாடு மிக பிரசித்தம்.
அந்நாடுகளில் மாசி கருவாடு இல்லாமல் உணவு பரிமாறப்படுவதில்லை என்ற வழக்கம் உண்டு. அந்த அளவுக்கு மாசி கருவாடு அங்குள்ளவர்களால் விரும்பி உண்ணப்படுகிறது. இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் விருந்தினர் வீடுகளுக்கு செல்லும்போதுகூட மாசி கருவாட்டை விரும்பி வாங்கிச் செல்லும் வழக்கம் இருக்கிறது.
இதனால் இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு தூத்துக்குடியிலிருந்து மாசி கருவாடு ஏற்றுமதி செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. தினசரி டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டுவந்த மாசி கருவாட்டின் ஏற்றுமதி தற்போது தடைபட்டுள்ளது. கருவாடு இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதித்திருப்பதே முக்கிய காரணமாக இதற்கு உள்ளது.
சமீபத்தில் உலகத்தையே அச்சுறுத்திய கரோனா தொற்று இலங்கையிலும் தன் கோரதாண்டவத்தை காட்டியது. இதனால் இலங்கை அரசு வெளிச்சந்தைகளில் மக்கள் கூடுவதற்கும், கருவாடு இறக்குமதிக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. எனவே தூத்துக்குடியிலிருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டுவந்த மாசி கருவாடு ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் அளவுக்கு பொருள் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், தென் தமிழ்நாட்டில் நீண்ட கடற்கரையுடைய மாவட்டமாகும். மற்ற கடலோர மாவட்டங்களைக் காட்டிலும் அதிகமான கடற்கரை கிராமங்களை கொண்டுள்ள மாவட்டம் என்பதால் மாவட்டத்தின் பிரதான தொழில் மீன்பிடி தொழிலாகும்.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் சார்ந்த தொழில்களும், நிறுவனங்களும் சற்று அதிகம். சமத்துவபுரம், அந்தோணியார்புரம், புதூர், தருவைகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாசிகருவாடு தயார் செய்யும் பணியில் சுமார் 15 நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 50 பணியாளர்கள் தினக்கூலிகளாக வேலை செய்துவருகின்றனர். காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் பணியானது மாலை 7 மணிவரை நீடிக்கிறது. ஆண்களுக்கு தினசரி கூலியாக 500 ரூபாயும், பெண்களுக்கு 350 ரூபாயும் வழங்கப்படுகிறது.
கரோனா அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு மெல்ல மெல்ல சரிவடைந்து வந்த பொருளாதாரத்தை நிமிர்த்தும் பணியில் ஒவ்வொரு நாடும் மும்முரம் காட்டிய நிலையில், இலங்கையில் கருவாடு இறக்குமதிக்கு இன்றளவும் நீக்கப்படாத தடை தூத்துக்குடி மாவட்ட கருவாடு உற்பத்தியாளர்களை கலக்கமடைய செய்துள்ளது. இறக்குமதி தடையினால் மாசிகருவாடு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டதோடு அதை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது.
தினக்கூலிகளாக கருவாடு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்கள் தற்பொழுது தொழில் முடக்கத்தால் தவித்துவருகின்றனர். நெடுங்காலமாக இந்தத் தொழிலை மட்டுமே நம்பியிருந்த பலரும் வேறு தொழிலுக்குச் செல்ல வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கருவாடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், "அன்றாட பிழைப்புக்காக கருவாடு உள்பத்தி பணியில் ஈடுபட்டுவருகிறோம். இதில் கிடைக்கும் வருமானமே எங்களது குடும்ப வருமானத்தில் பிரதானம். தற்போது இலங்கையில் கருவாடு இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை எங்களது வாழ்வை மிகவும் பாதித்துள்ளது.
தேக்கம் அடைந்துள்ள சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டால் மட்டுமே புதிதாக கருவாடு தயார் செய்யும் பணியில் நாங்கள் ஈடுபட முடியும். 50 பணியாள்கள் பணி செய்துவந்த இடத்தில் தற்பொழுது தொழில் இல்லாத காரணத்தினால் தினசரி 20க்கும் குறைவானவர்கள் மட்டுமே பணிக்கு வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் பலருக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாசி கருவாடு ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையால் தொழிலாளர்களாகிய எங்களுக்கு மட்டும் பாதிப்பல்ல. அரசாங்கத்திற்கும் வருமான இழப்பு ஏற்படுகிறது. ஏனெனில் இலங்கைக்கு கருவாடு ஏற்றுமதிக்காக சுங்கக் கட்டணமாக பெருந்தொகையை நாங்கள் செலுத்துகிறோம்.
அவ்வாறு முறையாக வரி கட்டியே இந்தத் தொழிலை நடத்திவருகிறோம். இறக்குமதி தடையினால் இந்தத் தொழிலில் முதலீடு செய்த பணம் முடங்கி போயுள்ளது. இலங்கைக்கு ஏற்றுமதிக்கு அனுப்ப முடியாததால் இந்தத் தொழிலின் மூலமாக அரசாங்கத்திற்கு கிடைக்கக்கூடிய வருவாயும் நஷ்டம் அடைந்துள்ளது.
எனவே கருவாடு ஏற்றுமதியை மீண்டும் தொடங்கிட மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கையில் கருவாடு இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வலியுறுத்த வேண்டும். துரித நடவடிக்கையின் அடிப்படையில் இதை செய்தால் இதை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வு சீராகும் என நம்புகிறோம்" என்றார்.
இதையும் படிங்க... ஊரடங்கு உத்தரவால் கருவாடு விலை கடும் வீழ்ச்சி - உற்பத்தியாளர்கள் வேதனை