மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களின் பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு நகரங்களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அதன்படி, தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு ரூ.53 கோடியே 40 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. தூத்துக்குடியில் 4 தளத்துடன் கட்டப்படவுள்ள ஸ்மார்ட் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஏடிஎம் மையங்கள், உணவகங்கள், சிற்றுண்டிகள், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் அலுவலகங்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, குளிரூட்டப்பட்ட காத்திருப்போர் அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறைகள், பொருள்கள் வைப்பு பாதுகாப்பு அறை, சுகாதார ஆய்வாளர் அறை, லிப்ட் வசதி, தானியங்கி படிக்கட்டு வசதி, இருசக்கர சைக்கிள் வாகன காப்பகம் மற்றும் இணைய வசதி உள்பட பல்வேறு அம்சங்களுடன் முற்றிலும் நவீன மையத்தில் பேருந்து நிலையம் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள பழைய பேருந்து நிலையம் மற்றும் பேருந்து பணிமனை உள்ளிட்ட பகுதிகளை ஒன்றிணைத்து இத்திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற உள்ளது. இதற்காகப் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள வாடகை கடைகளை காலி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி, திருச்செந்தூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் அனைத்தும் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மொத்தம் 3.36 ஏக்கர் பரப்பளவில் புதிய நவீனமயமாக்கப்பட்ட ஸ்மார்ட் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் தரைதளத்தில் வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் வந்து செல்லும் வழி, சுற்றுச்சூழல் பூங்கா, நீரூற்று உள்பட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட உள்ளன. புதிதாகக் கட்டப்பட உள்ள ஸ்மார்ட் பேருந்து நிலையத்தில் உள்ள தரை தளத்தில் 29 பேருந்து புறப்பாடு முனையங்கள் அமைய உள்ளன. மேலும் 14 பேருந்து முன்பதிவு அலுவலகங்கள் அமைக்க உள்ளன.
சுற்றுச்சூழலை பேணிக் காக்கும் வகையில் மரக்கன்றுகள், அலங்கார பூச்செடிகள், நீரூற்றுகள், ஆகியவை அமைய இருக்கின்றன. எனவே, இந்த திட்டப் பணிகள் அனைத்தையும் 2 ஆண்டுகளுக்குள் முடிக்க மாநகராட்சி பொறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.