நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் தட்டுப்பாடால் மக்கள் அதிகளவில் உயிரிழக்க நேர்ந்தது. அதன் காரணமாக, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஜூலை 31ஆம் தேதிவரை அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, கடந்த மே மாதம் 13ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து திரவ ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு, டேங்கர் லாரிகள் மூலமாக மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, கும்பகோணம், தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், ராமநாதபுரம், தென்காசி, கோயம்புத்தூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.
இதுதவிர கரோனா பாதித்த நோயாளிகளுக்கு நேரடியாக ஆக்சிஜன் வழங்குவதற்காக, சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பி அனுப்புவதற்காக 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆக்சிஜன் வாயு சிலிண்டர்களும் சப்ளை செய்யப்பட்டுவந்தன.
2,304.85 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி
மே 13ஆம் தேதி தொடங்கி ஜூலை 30ஆம் தேதி காலை 6 மணி நிலவரப்படிவரை, ஸ்டெர்லைட் ஆக்சிஜன் அலகில் 2,304.85 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் 2159.38 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மருத்துவ காரணங்களுக்காக தமிழ்நாட்டின் பிறப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுதவிர 18 ஆயிரத்து 705 சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டதில் 11.19 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மருத்துவ பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியவை ஆலையில் இருப்பில் உள்ளன.
இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதி நாளையுடன் நிறைவுபெறுவதால், ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி அலகில் நடைபெற்று வந்த பணிகள் இன்று மாலையுடன் நிறுத்தப்பட்டன.
கால நீட்டிப்பு கோரி மனு தாக்கல்
இருப்பினும், கரோனா 3ஆம் அலை அச்சுறுத்தலை நாடு எதிர்நோக்கி உள்ளதாலும், அண்டை மாநிலமான கேராளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு, நிமோனியா காய்ச்சல் உள்ளிட்டவற்றால் மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ஆக்சிஜன் உற்பத்திக்காக வழங்கப்பட்ட அனுமதியை கால நீட்டிப்பு செய்து வழங்கவேண்டும் என ஸ்டெர்லைட் வேதாந்தா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கிடைக்கும்பட்சத்தில், உடனடியாக உற்பத்தி செய்வதற்கு ஆக்சிஜன் ஆலையை பராமரிக்க இரண்டு மெகாவாட் மின்சாரம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
திறக்க எதிர்ப்புகோரி தூத்துக்குடியில் போராட்டம்
மறுபுறம், ஆக்சிஜன் உற்பத்தி காரணங்களுக்காக மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்ச நீதிமன்றம் அனுமதி தரக்கூடாது எனவும், ஆலையை முழுவதுமாக அப்புறப்படுத்த தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி தூத்துக்குடியில் பல போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
ஆக்சிஜன் விவகாரம் விஸ்வரூபம் எடுக்குமா?
ஆகையால், ஸ்டெர்லைட் ஆக்சிஜன் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா? இல்லையென்றால் அரசு ஏற்கனவே பிறப்பித்த அரசாணையின்படி ஆலை நாளை இழுத்து மூடப்படுமா என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்களிடையே எழுந்துள்ளது.
இதற்கிடையில், திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்பதால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டிய அவசியமில்லை என்ற தமிழ்நாடு அரசின் முடிவிற்கு நன்றி.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக இனி ஒருபோதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்காது என்ற உறுதிமொழியை காப்பாற்றிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு நீட்டிப்பு