தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை ஆணையம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பலதரப்பட்ட மக்கள் இடையே விசாரணையை நடத்திவருகின்றது.
ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 19ஆவது கட்ட விசாரணை கடந்த 25ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இது குறித்து ஆணைய வழக்கறிஞர் வடிவேல் சேகர் கூறுகையில், “துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையத்தின் 19ஆவது கட்ட விசாரணையில் 31 சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இதில் 15 பேர் முன்னிலையாகினர். 10 சாட்சிகளில் அபிடவிட் தாக்கல்செய்தவர்களுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்படும். இதில் 634 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
மேலும் 20ஆவது கட்ட விசாரணை மார்ச் மாதம் தொடங்கும் என்றும் ரஜினிகாந்த்திற்கு அழைப்பணை அனுப்புவது குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க...மருத்துவர் நியமனத்தில் முறைகேடு: பேரவை துணைத் தலைவரே புகாரளித்ததால் பரபரப்பு!