தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சையது இப்ராஹீம் ஷா (42). மீனவரான இவர் கடந்த 11ஆம் தேதி பைபர் படகில் சக மீனவர்கள் ஐந்து பேருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 25 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இப்ராகிம் ஷா மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது கடலில் வீசியிருந்த வலையை இழுக்க முயன்றபொழுது காலில் வலை சிக்கிக்கொண்டதால் அவர் கால் தவறி கடலுக்குள் விழுந்து மூழ்கினார். இதைப்பார்த்த சக மீனவர்கள் இப்ராகிம்ஷாவைக் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால், நீரோட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் இப்ராகிம்ஷாவை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே இது குறித்த தகவல் கடலோரக் காவல்படைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலில் விழுந்து மாயமான இப்ராகிம்ஷாவை தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 15 படகுகளிலும் சம்பவ இடத்திற்கு சென்று கடலில் மாயமான மீனவரை தேடிவருகின்றனர். மீனவர் கடலில் விழுந்து மாயமானதைத் தொடர்ந்து இன்று திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதையடுத்து மீனவர் சங்க நிர்வாகி முகமது கூறுகையில், "மீனவர்களைப் பாதுகாக்க தனி அமைச்சகம் அமைக்கப்படும் எனக் கடந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீனவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடலில் மீனவர் இறந்தால் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை என்பதை மிகவும் காலதாமதமாக வழங்கப்பட்டுவருகிறது. எனவே கடலில் இறந்த மீனவரின் உடல் கிடைத்தாலும் கிடைக்காமல் போனாலும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய நிவாரண உதவித் தொகையினை கால தாமதமின்றி அரசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க...ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை நீடிப்பு