தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் சந்திஸ்டன் (25). மீனவரான இவர் கடந்த 24ஆம் தேதி காலை ஆறு மணி அளவில் சக மீனவர்கள் முனியசாமி, முத்து, எட்ராஜா, சண்முகவேல், அரசு, பிரசாத், ராமன் ஆகியோருடன் சேர்ந்து பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் ஆழ்கடலில் சங்கு குளிப்பதற்காகச் சென்றார்.
அங்கு தாமஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அதில் சந்திஸ்டன் எதிர்பாராதவிதமாக சிக்கி உயிரிழந்தார். இதைப்பார்த்த விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி வலையை அறுத்தெறிந்துவிட்டு உடனடியாக கரைக்கு திரும்பினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திஸ்டனுடன் வந்த சக மீனவர்கள் கடலோர காவல்படைக்கும், தூத்துக்குடி வடபாகம் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலில் மூழ்கிய சந்திஸ்டனை கடந்த இரண்டு நாட்களாக, காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 14 கடல் மைல் தொலைவில் சந்திஸ்டன் உடலை மீட்டு காவல்துறையினர் கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.