தூத்துக்குடி: ஆங்கில புத்தாண்டு 2023 நாளை இரவு பிறப்பதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 'தூத்துக்குடி மாநகரில் உள்ள முத்துநகர் கடற்கரை, ரோச் பூங்கா கடற்கரை, துறைமுக கடற்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் கடலில் இறங்கி யாரும் புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாடக்கூடாது. புத்தாண்டு நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் எவ்வித உற்சாக குதூகல கொண்டாட்டங்களுக்கும் அனுமதி கிடையாது. பொதுமக்கள் சாலைகளில் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
புத்தாண்டு அன்று இளைஞர்கள் பந்தயம் வைத்து பைக் ரேஸ் போன்ற செயல்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் கூட்டங்களில் பைக் வீலிங் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்' என எச்சரித்துள்ளார்.