கோவில்பட்டி சண்முக சிகாமணி நகர் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜா(29). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சக்தி வெங்கடேஷ்(22), அந்தோணிராஜ்(29), மாரிமுத்து(24), தங்கராஜ்(24) மற்றும் சுடலைமணி(27) போன்றவர்கள் நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்கும் ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் ராஜாவை கொலை செய்ய திட்டமிட்ட இவர்கள், கடந்த 07.06.2017 அன்று இரவு ராஜாவுக்கு அதிகமாக மதுவை குடிக்க கொடுத்துள்ளனர். பின்னர் போதை தலைக்கேறிய ராஜாவை தூக்கிச்சென்று ஈராட்சி-கசவன்குன்று செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் வைத்து அரிவாள் மற்றும் கத்தியால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து ராஜாவின் தந்தை பாக்கியநாதன் புகார் அளித்ததன் பேரில் கொப்பம்பட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சக்தி வெங்கடேஷ் உட்பட ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தக் கொலை வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - IIஇல் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன், இக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரில் சக்தி வெங்கடேஷ், அந்தோணிராஜ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்தும், மீதமுள்ள மூன்று பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார்.