கரோனா ஊரடங்கு காரணமாக மாலத்தீவில் சிக்கித் தவித்த தமிழர்கள் 200 பேரை, சமுத்திர சேது திட்டத்தின் கீழ் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐராவத் போர்க்கப்பல் தாயகம் அழைத்து வந்தது.
நேற்று முன்தினம் (ஜூன் 21) மாலை மாலத்தீவிலிருந்து கிளம்பிய ஐராவத் கப்பல் இன்று (ஜூன் 23) காலை வஉசி துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் மூலம் தாயகம் திரும்பிய பயணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகத்தின் சுகாதாரக்குழு சார்பில் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து குடியுரிமை அலுவலர்கள் சோதனை நடைபெற்றது. பின்னர் பயணிகள் அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “வெளிநாட்டில் சிக்கி தவித்த இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பொருட்டு மத்திய அரசின் சமுத்திரக் சேது திட்டத்தின் கீழ் மூன்றாவது கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளது.
ஏற்கனவே ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலமாக இரண்டு முறை பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் மூலமாக 200 பேரை மாலத்தீவிலிருந்து இன்று (ஜூன் 23) அழைத்து வந்துள்ளனர்.
அவர்களுக்கு தெர்மல் ஸ்கேன் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு குடியுரிமை சோதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவரவரின் சொந்த மாவட்டங்களுக்கு மொத்தம் எட்டு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அங்கு அவர்கள் தனிமை முகாமில் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அடுத்த கட்டமாக ஜூன் 28ஆம் தேதி ஈரான் நாட்டிலிருந்து 700 இந்தியர்களை தூத்துக்குடி அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் அதிகமாக மீனவர்கள் தாயகம் திரும்ப இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன” என்றார்.
மேலும், “கரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு வருவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பரவல் இல்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மீண்டும் முழு ஊரடங்கும் தேவையற்றது” எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க...'உச்ச நீதிமன்ற கட்டளைகளை அரசு பின்பற்ற வேண்டும்'- மு.க. ஸ்டாலின் அறிக்கை!