இலங்கையில் விரலி மஞ்சளுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. இலங்கையில் விரலி மஞ்சள் டன் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம் வரை அதிகரித்து இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை, கடலோர காவல்படையினர் கடற்கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரத்தை அடுத்துள்ள கோவளம் கடற்கரை பகுதியில் விரலி மஞ்சள் லாரி மூலமாக கொண்டு செல்லப்பட்டு அதன் பின் கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக க்யூ பிரிவு காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன. இந்தத் தகவலையடுத்து காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினர். இதில் மஞ்சள் ஏற்றி வந்த லாரியை காவல்துறையினர் பிடித்தனர்.
பின் அந்த லாரியை சோதனை செய்ததில் மஞ்சள் தூள் 1.5 டன், விரலி மஞ்சள் 2.820 கிலோ, ஏலக்காய் 125 கிலோ, கரெட் தாள் 125 பெட்டி உள்ளிட்டவைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, க்யூ பிரிவு காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி முத்துகிருஷ்ணபுரத்தை சார்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், சாயல்குடியை சார்ந்த சுப்பிரமணியம், சாயர்புரத்தை சார்ந்த ஜெபமணி, அரிச்சந்திரன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.