ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் சுந்தரராஜனை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், செய்துநங்கநல்லூர், வல்லநாடு, தெய்வசெயல்புரம், புளியம்பட்டி, ஓனமாங்குளம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக, சசிகலா முன்பு நாலு காலில் மண்டியிட்டவர் எடப்பாடி பழனிசாமி. நன்றி மறந்தவர். இவரோடு தென் மாவட்டத்தினை சேர்ந்த எட்டப்பன் ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்து நிற்கிறார். இரட்டை இலை சின்னம் இருந்தால் ஜெயித்து விடலாம் என நினைக்கிறார்கள். அந்த சின்னம் எம்ஜிஆர், ஜெயலலிதா கைகளில் இருந்தபோது நிச்சயம் வெற்றிதான். தற்போது துரோகிகளின் கையில் இருக்கும்போது எப்படி வெற்றி கிடைக்கும்.
அம்மா படத்தினை சட்டமன்றத்தில் வைக்க கூடாது என்ற தேமுதிக, அம்மாவிக்கு நினைவு மண்டபம் கட்ட கூடாது என்று கூறிய பாமக, கடைசிவரை அம்மாவை பார்க்க வராத மோடியின் பாஜக என மூவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியை காப்பாற்ற திட்டமிடுகிறார் எடப்பாடி என்ற எடுபுடி. இவர் மோடியின் எடுபிடி. மோடியா இந்த லேடியா என அம்மா எதிர்த்து நின்று ஜெயித்தார்கள்.
இன்று மோடி எங்கள் டாடி என அவர்களிடம் சராணாகதி அடைந்துள்ளார்கள். அது மட்டுமல்லாமல் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். இடைத்தேர்தலில் ஆட்சியை காப்பாற்றி கொள்ள ஓட்டுக்கு, 10 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் வரை கொடுக்க தயாராக உள்ளார்கள். ஆட்சியை தக்க வைக்க திமுகவிடம் மண்டியிடவும் எடப்பாடி பழனிசாமி தயங்க மாட்டார், என்றார்.