தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு 31 ஆண்கள், 9 பெண்கள் ஊர்க்காவல் படை வீரர்களாக (Home Guards) தேர்வு செய்யப்படுவதற்கு, கடந்த 8ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த 24ஆம் தேதி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 100 பெண் விண்ணப்பதாரர்கள் உள்பட 695 பேர் ஊர்க்காவல் படை தேர்வுக்கு வந்திருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உயரம், கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் போன்றவை நடைபெற்றன.
இதில் தேர்வு பெற்ற 9 பெண், 31 ஆண் விண்ணப்பதாரர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊர்க்காவல் படையினருக்கு நாளை (டிச. 1) முதல் 45 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஊர்க்காவல் படை பணிக்கு இரண்டு திருநங்கைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க... சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட திருநங்கை மருத்துவர் - கிளினிக் அமைத்து கொடுத்த காவல் ஆய்வாளர்