திருநெல்வேலி: நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை இன்று (டிச.21) ஆய்வு செய்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை மக்களைக் காத்தது போலத் தென் மாவட்ட மக்களையும் தமிழக அரசு காக்கும். வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை விடவும் பல மடங்கு அதிகமாகவே தென் மட்டங்களில் மழை பெய்துள்ளது.
1801ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது தான் இதுபோன்ற அதி கனமழை பெய்துள்ளது. ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே அடியாகப் பெய்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக 10 அமைச்சர்களும் அதிகாரிகளும் நிவாரணப்பணியில் ஈடுபட அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும், மாநில பேரிடர் மீட்புப் படையின் 375 வீரர்களும் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 275 வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், டெல்லிக்குச் சென்று அங்கு பிரதமரைச் சந்தித்து, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்குத் தேசிய நிவாரண நிதியில் இருந்து நிவாரணத்தொகை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு மட்டும் முதற்கட்டமாக 2 ஆயிரம் கோடி நிவாரணத் தொகையாக கேட்கப்பட்டுள்ளது.
141 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, வரையில் 12,653 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சென்றடைய முடியாத கிரமங்களில் உள்ள மக்களை மீட்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டு அந்த பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பிவைக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வீடுகளை இழந்த மக்களுக்கும், விவசாயிகளுக்கும், கால்நடைகளை இழந்த மக்களுக்கும் தமிழக அரசு தேவையான இழப்பீட்டை வழங்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்கு ஏற்கனவே வழங்கிடும் தொகை ரூ.5 ஆயிரத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் மழையால் 33 விழுக்காடு மற்றும் அதற்கும் மேலும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் உள்ளிட்ட பாசன பயிர்களுக்கு ஹெக்ட்டர் ஒன்றுக்கு ரூ.13,500-ல் இருந்து ரூ.17,000-மாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் மழையால் 33 விழுக்காடு மற்றும் அதற்கும் மேலும் பாதிக்கப்பட்டால் ஹெக்ட்டர் ஒன்றுக்கு ரூ.18,000-ல் இருந்து ரூ.22,500ஆக உயர்த்தி வழங்கிடவும் மற்றும் மானவாரி பயிர்களுக்கு ஹெக்ட்டர் ஒன்றுக்கு ரூ.7,410-ல் இருந்து ரூ.8,500ஆக உயர்த்தி வழங்கிடவும் எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்தால் ரூ.33,000-ஆக இருந்த இழப்பீட்டுத் தொகையை ரூ.37,500ஆக உயர்த்தி வழங்கிடவும் வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழந்தால் ரூ.3,000-ஆக இருந்த இழப்பீட்டுத் தொகையை ரூ.4,000ஆக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, முழுமையாகச் சேதம் அடைந்த படகுகள், கட்டுமரங்கள் மற்றும் மீன்பிடி வலைகள் ஆகியவைக்கான நிவாரணத் தொகையை ரூ.32,000-ஆக இருந்த இழப்பீட்டுத் தொகையை ரூ.50,000ஆக உயர்த்தி வழங்கிடவும் மற்றும் பகுதியாகச் சேதமடைந்த கட்டுமரங்கள் ரூ.10,000-ஆக இருந்த இழப்பீட்டுத் தொகையை ரூ.15,000ஆக உயர்த்தி வழங்கப்படும். முழுவதும் சேதம் அடைந்த இயந்திரப் படகுகளுக்கு குறைந்தபட்ச மானிய தொகை ரூ.75,000-யில் இருந்து ரூ.1,00,000-மாக உயர்த்தி வழங்கிடவும் அதிகபட்ச மானிய தொகை ரூ.5,00,000-யில் இருந்து ரூ.7,50,000-மாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பட்டையின் அடிப்படையில் ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட பிற தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்ப அட்டையின் அடிப்படையில் ரூ.1000 நிவாரண நிதி வழங்கப்படும்.
மேலும், இயற்கை பேரிடர்களால் ஏற்படும் செலவுகளை சமாளிக்க மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும், மாநில பேரிடர் நிவாரண நிதி உள்ளது. இதன்படி, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ.1200 கோடியாகும். இதில் 75 விழுக்காட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் மீதம் 25 விழுக்காட்டை மாநில அரசு ஏற்றிட வேண்டும். அதே இயற்கை பேரிடர் பெரிதாக இருக்கும் பட்சத்தில் இந்த பேரிடர் நிவாரண நிதி போதவில்லை என்றால் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது வரை கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒகேனக்கல் பகுதியை சர்வதேச சுற்றுலாத் தலமாக அங்கீகரிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் எம்.பி.செந்தில்குமார் கோரிக்கை..!