தூத்துக்குடி: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணித் திருவிழா கடந்த வாரம் செப்டம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறக்கூடிய இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 7ஆம் நாள் திருவிழாவான நேற்று (செப். 10) மாலை சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 1 மணிக்குத் திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி சண்முகர், வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தார்.
அதனை அடுத்து சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார தீபாரனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தங்கச் சப்பரத்தில் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் சிவப்பு சாத்திக் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அப்போது பக்தர்கள் சிவப்பு வண்ண மலர்களைத் தூவி அரோகரா என பக்தி கோசங்கள் முழங்க சுவாமியைத் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எட்டு வீதிகளிலும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவின் தொடர்ச்சியாக இன்று (செப். 11) சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையும் படிங்க: Theni Kumbakkarai falls: மீண்டும் குதூகலமாக மாறிய கும்பக்கரை அருவி.. சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்!