தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான ஆவணித்திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று 7ஆவது நாள் திருவிழாவில் சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை 1.00 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. இதனைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு சண்முகருக்கு உருகு சட்ட சேவை நடந்தது.
இதனையடுத்து சுவாமி சண்முகர் சண்முகவிலாஸ் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு வண்ணமலர்களால் அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அளித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து சுவாமி சண்முகர் பிள்ளையன் கட்டளை மண்டபம் சென்றடைந்தார். அங்கு சுவாமி சண்முகருக்கு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிவப்பு சாத்திய கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆவணித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 26-ம் தேதி நடக்கிறது. இந்த திருவிழா காண ஏற்பாடுகளை கோயில் தக்கர் இரா.கண்ணன் ஆதித்தன், கோயில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியைத்தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்