தூத்துக்குடி தாமஸ் நகரைச் சேர்ந்தவர் கெபின் (71). மீனவரான இவர், கடந்த சில வருடங்களாக குரல் மாற்றம், மூச்சுத்திணறல், உணவு விழுங்குதில் சிரமம் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டுவந்தார்.
இது தொடர்பாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், தொண்டைப் பகுதியில் குரல் வளையில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தொண்டைப்புற்றுநோய் அகற்றத்திற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
இது குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாவலன் கூறுகையில், "நவீன எண்டோஸ்கோபி கருவி மூலம் கெபின் என்பவருக்கு குரல்வளையிலிருந்து இருசதைகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குரல்வளையில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அவருக்கு குரல்வளை புற்றுநோய் கட்டி அகற்ற அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
ஐந்து மணிநேரம் போராடி, குரல்வளை புற்றுநோய் பாதித்த திசுக்களை வெற்றிகரமாக அகற்றினர். இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள ரூ. 2 லட்சம் வரை செலவாகும். ஆனால் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த அறுவை சிகிச்சை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிகிச்சைக்கு பின், கெபின் நலமுடனும், திட உணவுகளை உட்கொள்ளும் வகையிலும் ஆரோக்கியமாக உள்ளார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான்கு கால், மூன்று கைகளுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை!