தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே சிவலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் மகேஷ்குமார் (11). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவரும் இவரது தம்பி அருண்குமார் (7), அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் சுதன் (7) ஆகியோர் அருகிலுள்ள கண்மாய் பகுதியில் விளையாடச் சென்றுள்ளனர். மூவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர்.
இந்நிலையில் கண்மாய் கரையோரம் சைக்கிள் நிற்பதை பார்த்த சிலர், உடனடியாக ஊருக்குள் தகவல் கூறினர். இதனையடுத்து பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அங்கு வந்து பார்த்தபோது கண்மாய் நீரில் மாணவர் அருணின் உடல் மிதந்து நிலையில் கிடந்தது. உடனடியாக கிராமத்து இளைஞர்கள் மேலும் இரண்டு சிறுவர்களை கண்மாயில் இறங்கி தேடினர். இதில் மகேஷ் மற்றும் சுதன் ஆகியோரின் உடல்களும் மீட்கப்பட்டன.
தகவல் அறிந்து அங்கு சென்ற புதூர் காவல் நிலைய போலீஸார் மூன்று மாணவர்களின் உடல்களையும் மீட்டு மேல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களாக பெய்த கோடை மலையில் கண்மாயில் நீர் வரத்து ஏற்பட்டு தண்ணீர் உள்ளது.
இதில் கண்மாய் அருகே விளையாட சென்ற மாணவர்கள் குளிப்பதற்காக இறங்கிய போது மூழ்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து புதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜேடர்பாளையத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள்..எஸ்.பி. விடுத்த வார்னிங்.. நாமக்கல்லில் நடப்பது என்ன?