அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் ஒற்றைத் தலைமை தான் வேண்டும் எனக் கருத்து கூறியிருந்தோம்.
அதிமுக என்றுமே ஒற்றைத் தலைமையில் தான் இருந்து வந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, ஏற்பட்ட சூழ்நிலையின் காரணமாக அன்று தற்காலிகமாக பொதுக்குழுவில் இரண்டு தலைமையின்கீழ் இயங்கும் என செயல்பட்டு வந்தோம். ஆனால், இன்று பெரும்பாலான மாவட்டச்செயலாளர்கள் இன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாக ஒற்றைத்தலைமையினையே விரும்புகின்றனர். பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் அதிக வாக்கு வங்கியுடன் உள்ள எதிர்க் கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒற்றைத் தலைமையில் தான் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு 30 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
அனைவருமே ஒற்றைத்தலைமையினையே விரும்புகின்றனர். பொதுக்குழுவுக்கு அனைத்து அதிகாரம் இருப்பது ஒருங்கிணைப்பாளருக்கு நன்றாகவே தெரியும். எம்ஜிஆர் காலத்தில் பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ... அதுதான் இறுதி முடிவு' எனக் கூறினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டச்செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் கூறுகையில், 'தமிழ்நாட்டின் சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் வலுவான ஒரு எதிர்க்கட்சித் தலைவராக கழகத்தையும், மக்களையும் வழிநடத்திக் கொண்டு வருகிறார்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்பதே என்னுடைய கருத்து" எனக் கூறினார்.
அதேபோன்று தூத்துக்குடி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நட்டர்ஜி எடப்பாடி பழனிசாமிக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உச்சகட்டத்தில் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் - வெல்லப்போவது யார்..?