தூத்துக்குடி: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.14) தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் 7,893 பயனாளிகளுக்கு ரூ.206.47 கோடி மதிப்பில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற வளர்ச்சி பணிகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி, பணிகள் குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழ் நாடு முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்.
அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தமிழக அரசின் அனைத்து திட்டம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளேன். அரசு திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை; 'விரைவில் குறைகள் நீங்கும்' - உதயநிதி ஸ்டாலின் சொன்ன தகவல்..!
அப்போது இந்த ஆய்வுக் கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொள்ளாதது ஏன்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "அவர் அவசர வேளையாக வெளிநாடு சென்று இருக்கின்றார். வரும் வாரங்களில் மீண்டும் இரண்டு பேரும் சேர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளோம்" என்று தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக உள்ளாட்சித் தேர்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "முதலமைச்சர் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அறிவிப்பார் என்றார்" என்று பதிலளித்தார்.
இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி மேயர், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் மற்றும் துறை துணைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர், கூடுதல் ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் மற்றும் பல்வேறு அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்