சென்னை: குன்றத்தூரில் வீட்டில் எலியைக் கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த மருந்திலிருந்து வெளியேறிய நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக, தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் மருந்து அடித்த தினகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், சென்னை குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவரது மனைவி பவித்ரா (31). கிரிதரன் குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வைஷ்ணவி(6), சாய் சுதர்சன் (1) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
கிரிதரன் வீட்டில் அதிகமான எலித் தொல்லை இருந்ததால், அவற்றை விரட்டுவதற்காக தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அதனைத் தொடர்ந்து தியாகராய நகரில் உள்ள பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தை அணுகி, அவர்களில் ஊழியர்கள் வாயிலாக வீட்டில் ஆங்காங்கே எலி மருந்து வைத்தததாகத் தெரிகிறது.
குழந்தைகளுடன் கோயிலுக்குச் சென்றிருந்த பவித்ரா வீடு திரும்பியதும், கணவர் மற்றும் குழந்தைகளுடன் படுக்கையறைக்குச் சென்று ஏசி போட்டுத் தூங்கியுள்ளார். ஆனால், நேற்று (நவ.14) காலை சில அசெளகரியங்களுடன் கண்விழித்த வீட்டில் இருந்த அனைவருக்கும் மூச்சுத் திணறலும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கிரிதரன், பவித்ரா மற்றும் இரண்டு குழந்தைகளை குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுமி வைஷ்ணவி மற்றும் சிறுவன் சாய் சுதர்சன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கிரிதரன் மற்றும் பவித்ரா ஆகியோர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் பவித்ராவுக்கு மட்டும் நினைவு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரிடம் பேசியதில், காற்று புகாத ஏசி அறையில் எலி விஷத்தின் தீவிரத்தன்மை அதிகமாக இருக்கும் என்பதால், இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என மருத்துவர்கள் கணித்துள்ளனர்.
இதனையடுத்து, அவரிடம் குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், “வீட்டில் எலி மற்றும் பூச்சி தொல்லை இருந்ததால், ஆன்லைன் மூலம் தி-நகரில் உள்ள தனியார் பெஸ்ட் கண்ட்ரோலை அழைத்தோம். இதன் மூலம் வந்த நபர், வீட்டில் கதவு ஜன்னல் உள்ளிட்டவற்றில் பேஸ்ட் போன்ற மருந்து வைத்தார். மேலும், எலிக்கு வீட்டை சுற்றி மாத்திரைகளும் வைத்தார்,” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தங்கை கண் முன்னே சடலமான கல்லூரி மாணவி.. நெல்லையில் நெஞ்சை உலுக்கிய சோக விபத்து..!
அதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், எலி மருந்தானது வீடு முழுவதும் காற்றில் பரவியுள்ளது. இதனை சுவாசித்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் சில மணி நேரங்களில் உடல்நல குறைவு ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக எலி மருந்து வைத்த சம்பந்தப்பட்ட தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி, ஊழியர் என 3 பேர் மீது குன்றத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்ட மூவரில், வீட்டில் மருந்து அடித்த தினகரன் என்பவரை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீதமுள்ள இருவர் தலைமறைவாக இருப்பதால், காவல்துறை அவர்களுக்கு சம்மன் அனுப்பி தேடி வருகின்றனர். உயிரிழந்த குழந்தைகளின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்விற்கு அனுப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் வைக்கப்பட்ட பூச்சி மருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் நச்சு கலந்து இருந்ததால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த சூழலில், தாம்பரம் தடயவியல் நிபுணர்களும் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து மாதிரிகளை சேகரித்துச் சென்றுள்ளனர்.
இதன் சோதனை முடிவுகள் வரும்போது, இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்து காற்றில் பரவிய எலி மருந்தால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம், பயன்பாட்டில் இருக்கும் பூச்சிக்கொல்லிகளின் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
மருத்துவர்கள் சொல்வதென்ன?: இந்த சம்பவம் குறித்து, சென்னை, எஸ்ஆர்எம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை நிபுணத்துவ மருத்துவர் வி.பி.சந்திரசேகரன் கூறுகையில், "எலி மருந்து மற்றும் பூச்சி மருந்து இவைகள் பொடியாகவும், கேக் போலவும், பேஸ்ட் மற்றும் ஸ்ப்ரே என பல்வேறு வகையில் கிடைக்கிறது. இந்த மருந்துகளில் ஜிங்க் பாஸ்பேட் மற்றும் அலுமினியம் பாஸ்பேட் போன்றவை கலக்கப்படுகிறது. இதில் அலுமினியம் பாஸ்பேட் கொடிய நச்சுத்தன்மையை உடையது. இதனை தவிர்த்து ரேட்டால் என்று அழைக்கப்படும் பேஸ்ட் மற்றும் கேக் போலவும் இருக்கக்கூடிய மருந்து உள்ளது. இவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான நச்சுத்தன்மைகள் உள்ளது.
ஆர்கனோ பாஸ்பரஸ்: தற்போது இந்த 2 குழந்தைகள் இறந்ததை பொறுத்தவரையில், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் என்ற நிலைகள் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த சம்பவத்திற்கு ஆர்கனோ பாஸ்பரஸ் வேதிப்பொருள் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், இதுதான் நமது சுவாசத்திலேயே பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற மருந்துகள் பூட்டிய அறையில் இருக்கும்போது அதனை சுவாசிக்க சுவாசிக்க நமது உடலில் நச்சுத்தன்மை பரவி உயிரிழக்க வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக சிறுகுழந்தைகள் மிக அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
அதேபோல, எப்போதும் இதுபோன்ற மருந்துகளை பயன்படுத்தும்போது வீடுகளில் உள்ள ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டியது மிகவும் அவசியமானது. மேலும், இந்த மருந்துகளின் பாதிப்பை சரியாக கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
ரேட்டால் பேஸ்ட்: அதிகப்படியான குழந்தைகள் இந்த ரேட்டால் பேஸ்ட் வகை பூச்சி மருந்துகளை பல் துலக்கும் பேஸ்ட் என்று நினைத்து சாப்பிட்டு உயிரிழந்த நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்துள்ளது. ஆனால், இதற்குமே சிகிச்சைகள் உள்ளன. சரியான நேரத்தில் இந்த பாதிப்பை கண்டறிவதன் மூலமாக, அதற்கான நிவாரண மருந்துகளை நரம்பு வழியே செலுத்தி சிகிச்சையளித்து உயிர்காக்க இயலும். அதுவும் இல்லை என்றால் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை மூலமாகவும் உயிர்காக்க இயலும்.
அலுமினியம் பாஸ்பேட்: பூச்சி மருந்துகளிலேயே மிகவும் கொடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது, பெருச்சாளிகளை கொல்ல பயன்படுத்தும் அலுமினியம் பாஸ்பேட் கலவையை உடைய எலி மருந்துகள்தான். ஏனெனில், இந்த அலுமினியம் பாஸ்பேட்டானது, தண்ணீருடன் சேரும்போது பாஸ்பீன் என்ற வாயுவை வெளியேற்றும். ஆகவே, அந்த வீட்டில் பயன்படுத்தப்பட்ட பூச்சிகொல்லி மாத்திரைகளில், அலுமினியம் பாஸ்பேட் கலவை இருந்து அவை தண்ணீரில் சேர்ந்து பாஸ்பீன் வாயுவை வெளியேற்றி அதனை சுவாசித்த குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம். ஏனெனில் இந்த வாயு மிகவும் கொடூரமானது. இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை கடுமையாக பாதிப்படைய செய்து இறப்பை ஏற்படுத்தும்" என்று மருத்துவர் சந்திரசேகரன் கூறினார்.
"எலி மருந்தை சுவாசித்தாலும் ஆபத்து": மதுரை, மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த மருத்துவர் கார்த்திகேயன் கூறும்போது, "பவுடர், மாத்திரை, பேஸ்ட் என மூன்று வகைகளில் எலி மருந்துகள் உள்ளன. இவற்றில் பேஸ்ட் வகை மருந்துதான் ஆபத்தை விளைவிப்பது என்று மக்கள் பொதுவாக நினைக்கின்றனர். ஆனால் எலி மருந்தை சுவாசித்தால் கூட நமக்கு பிரச்னைகள் ஏற்படும். எலி மருந்தில் ஜிங்க் பாஸ்பேட், அலுமினியம் பாஸ்பேட் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவற்றில் ஜிங்க் பாஸ்பேட்டை அதிகமாக சுவாசிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு நுரையீரலில் தண்ணீர் கொட்டும். இதனால் உயிரிழப்பு ஏற்படலாம். இந்த குழந்தைகளும் அப்படி இறந்திருக்கலாம்" என்று டாக்டர் கார்த்திகேயன் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.