தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள மாதா நகரைச் சேர்ந்தவர் செல்வம் (20). கொத்தனார் வேலை பார்த்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்ற பொன்பாண்டி ரவி (37). இவர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் டாஸ்மாக் பாரை நடத்தி வருகிறார். 12ஆவது வார்டு திமுக கிளைச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக செல்வத்திற்கும் - ரவிக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்துவந்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று நள்ளிரவு இரண்டு மணி அளவில் செல்வத்திற்கும் ரவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ரவி தரப்பினர், செல்வம் தரப்பினரை கத்தியால் குத்தினர். இந்த சம்பவத்தில் செல்வம், அவரின் நண்பர்களான முத்துக்குமார், முத்துசெல்வம் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதை தொடர்ந்து ரவி தரப்பினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கத்திக்குத்தில் காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முத்துக்குமார், முத்துச்செல்வம் ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி கொலை சம்பவம் தொடர்பாக ரவி, அவரது கூட்டாளிகளான பார்த்தசாரதி, இசக்கிமுத்து, கனகு ஆகியோரை தேடிவந்தனர். அப்போது, தாளமுத்து நகரில் பதுங்கியிருந்த பார்த்தசாரதியை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ரவி, இசக்கிமுத்து, கனகுவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியை உயிருடன் எரிக்க முயற்சி: குற்றவாளிக்கு வலைவீச்சு