தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட வெள்ளாரம் குளத்தில் சமீபத்தில் பாசன மடை கட்டப்பட்டுள்ளது. மடை கட்டிய பின்னர் கரையை பலப்படுத்தாததால் குளத்தின் கரை மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்து வந்தது.
பருவமழைக்கு முன்னர் கரையை பலப்படுத்தக்கோரி கிராம மக்கள் பல்வேறு முறை அலுவலர்களிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக குளக்கரையின் ஒருபகுதி மழைநீர் வரத்தால் அரிக்கப்பட்டு உடையும் நிலையை எட்டியது.
இந்தநிலையில் அலுவலர்களிடம் அளித்த மனுவிற்கு எந்தவித பலனும் இல்லாததால் விரக்தியடைந்த மக்கள், வெள்ளாரம் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக சரள் மண், மணல் மூட்டைகளை கொண்டு கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது தீவிரமடைந்துள்ள பருவமழை இன்னும் சில நாட்கள் கனமழையாக தொடர்ந்தால் குளக்கரை வலுவிழந்து உடையும் அபாயம் உள்ளது. சுமார் 2.5 கி.மீ. சுற்றளவுள்ள குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டால் வெளியேறும் வெள்ளநீர் தெற்கு காரசேரி அதனை சுற்றியுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்துவிடும் என்பதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
இதுகுறித்து கிராம விவசாயிகள் தெரிவிக்கையில், தற்போது விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்டு இருக்கும் வெள்ளாரம் குளத்தில் தொடர்ச்சியாக நான்கைந்து ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருகிறது.
முன்பு இப்பகுதி ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்டு இருந்த காலத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு கரை உடைந்தது வெள்ளநீர் ஊருக்குள் புகுந்ததில் 4 கிராமங்கள் பாதிக்கப்பட்டது. எனவே, குளக்கரை முழுவதுமாக உடைந்து ஊர் மக்களுக்கு விபரீதம் ஏற்படும் முன்னர் கரையை பலப்படுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.