தூத்துக்குடி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சொந்தமான, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த அனல்மின் நிலையத்திற்கு, நிலக்கரியை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக கப்பல் தளத்தில் இருந்து இறக்கி அனல்மின் நிலையத்திற்கு கொண்டு வருவதற்கு "கோல் ஜட்டி கன்வேயர்" அமைக்கும் பணி ராதா இன்ஜினியரிங் கம்பெனி மூலம் சுமார் 250 கோடி ரூபாய்க்கு முடிக்கப்பட்டு உள்ளது.
இந்த ராதா என்டர்பிரைசஸ் நிறுவனமானது, டெண்டரை முடிப்பதற்காக அனல் மின் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் 70 பேருக்கு 20 லட்ச ரூபாய் மதிப்பில், தனியார் ஹோட்டலில் வைத்து மது விருந்து அளித்ததாக புகார் எழுந்தது. இது புகார் தொடர்பாக வருமான வரித் துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு இன்று (செப்.20) அனல் மின் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில், மது விருந்தில் கலந்து கொண்டவர்கள் யார்? எதற்காக விருந்து அளிக்கப்பட்டது. மேலும், பணம் கைமாறி உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் கூறப்பட்டு உள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பினாமி நிறுவனம் தான் இந்த ராதா என்டர்பிரைசஸ் நிறுவனமா என்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பொருட்கள் சப்ளை செய்யும் முகவர்கள் மற்றும் அதில் இடைத்தரகர்களாக பணியாற்றிய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன்ர். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சில நிறுவனங்களில் இருந்து கேபிள் வயர், கன்வேயர் பெல்ட் போன்ற பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
கொள்முதல் செய்யப்பட பொருட்களில் முறைகேடு நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சில புலனாய்வு அமைப்புகள் மூலம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சப்ளை செய்த பொருட்களின் மதிப்பை விட அதிகமாக வாங்கியதாகவும், ஆனால் கணக்கில் அதன் விலை குறைத்துக் காட்டி வரி எய்ப்பு செய்துள்ளதாக புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், மின்சார வாரியத்திற்கு பொருட்களை சப்ளை செய்ய இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களும் வரி ஏய்ப்பு செய்ததன் மூலம் பணம் கமிஷனாக வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கிடைத்த தகவலின் படி, வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (செப். 20) காலை முதல் மின் வாரியத்திற்கு பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனம் மற்றும் இடைத்தரகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!