தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள பனிமய மாதா ஆலயம் கத்தோலிக்க திருச்சபையால் பெசிலாக அந்தஸ்து பெற்றது. தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்துக்கு இந்துக்கள், கத்தோலிக்கர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் வருவார்கள். இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். பிரசித்திப் பெற்ற பனிமய மாதா ஆலயத்தின் 438ஆம் ஆண்டு திருவிழா இன்று (ஜூலை 26) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
![](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-01-ols-shrine-basilica-church-flag-hosting-vis-7204870_26072020071629_2607f_00015_669.jpg)
தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில், ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா சிறப்பு திருப்பலி நடத்தினார். தொடர்ந்து ஆலயத்திலிருந்து மாதா உருவம் பொறிக்கப்பட்டிருந்த கொடி ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.
ஆலயத்தில் திருவிழா நற்கருணை ஆசிர், திருப்பலி நிகழ்வுகள் அனைத்தும் ஆலயத்துக்குள் மட்டும் நடைபெற்றன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.
![](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-01-ols-shrine-basilica-church-flag-hosting-vis-7204870_26072020071629_2607f_00015_619.jpg)
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்களால் நிரம்பி வழியும் ஆலய வளாகம் இந்தாண்டு பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பாதுகாப்பு பணிக்காக ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், ஆலயத்துக்கு வரும் நிர்வாக கமிட்டியினர் கடும் சோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்பட்டனர். திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையதளங்கள் வழியே நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
![](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-01-ols-shrine-basilica-church-flag-hosting-vis-7204870_26072020071625_2607f_00015_223.jpg)
இதையும் படிங்க: பனிமய மாதா ஆலய திருவிழாவில் கட்டுப்பாடு: கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தகவல்