தூத்துக்குடி: தூத்துக்குடியில் 2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. ஏற்கனவே 32 கட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் 1016 பேரிடமிருந்து வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டு, 1342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
33ஆவது கட்ட விசாரணை
இதைத் தொடர்ந்து 33ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரைச் சாலை அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஒருநபர் ஆணைய முகாம் அலுவலகத்தில் விசாரணை அலுவலர் அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது.
இதில், ஆஜராகி விளக்கமளிப்பதற்குத் துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது பணியிலிருந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் உயர் அலுவலர்கள் உள்பட 18 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, விசாரணை நாளின் தொடக்கத்தில் மூன்று பேர் ஆஜராகி வாக்குமூலத்தைப் பதிவுசெய்தனர். விசாரணையின் இரண்டாவது நாளான நேற்று (டிசம்பர் 14) விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சிப் பள்ளி முதல்வர் ராஜராஜன், நெல்லை காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் ஆகிய நான்கு பேரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அவர்களிடம் நேற்று மாலை வரை விசாரணை நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்
இன்று 3ஆம் நாள் விசாரணையில் சென்னை சைபர் பிரிவு-2 கண்காணிப்பாளராகப் பணியாற்றிவரும் அருண் பாலகோபாலன் ஒரு நபர் ஆணையம் முன்பு நேரில் ஆஜரானார். அவரிடம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது நடந்தவை குறித்தும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அவர் பொறுப்பேற்றது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
ஒருநபர் ஆணையத்தின் முதற்கட்ட விசாரணை வருகிற 18ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட விசாரணை 27ஆம் தேதிமுதல் 30ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. இதில் 29ஆம் தேதி நடைபெறும் விசாரணைக்குத் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ் ஆஜராகி விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 69 இடங்களில் ரெய்டு: எப்படி சிக்கினார் தங்கமணி - முழு விவரம்