தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் பேருந்து நிலையம் மாடியில் செயல்பட்டுவரும் முடித்திருத்தும் கடையில் வடமாநில இளைஞர் சாஜித் சல்மான் (23) என்பவர் பணிபுரிந்துவருகிறார்.
கடந்த 10 மாதங்களாக இவர் தனது சொந்த ஊருக்கோ அல்லது வெளிமாநிலத்திற்கோ, வெளிநாட்டிற்கோ என எங்கும் செல்லவில்லை. 144 தடை காலத்திலும் இவர் விளாத்திகுளத்திலேயே தங்கியிருந்தார்.
தற்போது தடை நீங்கி மறுபடியும் முடித்திருத்தும் தொழிலைச் செய்ய தொடங்கிய இவருக்கு கடந்த நான்கு நாள்களுக்கு முன்பாகக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்குச் சென்ற சாஜித், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து அவர் பணிபுரிந்த முடித்திருத்தகம், அவர் தங்கியிருந்த வீடு உள்ளிட்ட இடங்களை வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, பேரூராட்சி நிர்வாகம், காவல் துறையினரால் சீல்வைக்கப்பட்டு கரோனா நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இருந்த தெருக்கள் கடைகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முடித்திருத்தும் கடை இருந்த வணிக வளாகம் பூட்டி சீல்வைக்கப்பட்டது .
இதனிடையே அந்த முடித்திருத்தும் கடையில் முடிவெட்ட வந்த அனைவரும் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்துகொள்ளுமாறு அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து கடையில் முடி வெட்டிய விளாத்திகுளம் காவல் துறை ஆய்வாளர் பத்மநாதன் பிள்ளை உள்பட 15-க்கும் மேற்பட்ட நபர்கள் பரிசோதனை செய்துகொண்டனர்.
மேலும் வட்டாட்சியர் ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கையில், "யாராவது இந்தக் கடையில் முடி வெட்டியிருந்தால் தாங்களாகவே முன்வந்து கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்" என அறிவுறுத்தியதோடு தொலைபேசி எண்களையும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தாராவியில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கரோனா: எப்படி சாத்தியமானது?