தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தைச் சேர்ந்த தம்பதி காளியப்பன் - பாப்பா (60). இவர்களுக்கு திருமணமாகி ஐந்து மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் (பிப். 02) மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வனப்பகுதிக்கு பருத்தி எடுக்க பாப்பா சென்றார்.
ஆனால் மாலை வரை வீடு திரும்பாததால் அச்சமடைந்த உறவினர்கள், அக்கம் பக்கம் தேடி பார்த்துவிட்டு வனப் பகுதிக்கு சென்றனர். அங்குள்ள வரப்பு ஓரத்தில் ஆடைகள் கலைந்த நிலையில் முகம் சிதைக்கப்பட்டு பாப்பா சடலமாக கிடந்தார்.
இது குறித்து எட்டையபுரம் காவல் துறையினருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடம் விரைந்த விளாத்திகுளம் டி.எஸ்.பி. பீர்முகைதீன், எட்டயபுரம் ஆய்வாளர் கலா ஆகியோர் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, பாப்பா-வின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பாப்பா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : தேசியத் தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி பெண் நூதன முறையில் மோசடி!