தூத்துக்குடி: தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், வல்லவிளை ஆகிய இரண்டு பகுதிகளில் கூட்டுறவு நகைக் கடன் சங்கம் தொடங்கப்பட்டது. அதில் ஒன்றான தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக் கடன் சங்கத்தை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.
மேலும், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் மேற்கொள்ள 40 சதவீத மானியத்துடன் 5 மீனவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கடன் உதவிகள் மற்றும் ஏழு மீனவர்களுக்கு இரண்டு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதன் பின்னர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு நகைக் கடன் சங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் மீனவருக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ, அது சிறந்த முறையில் செய்யப்படும்" என்று கூறினார்.
அதனை அடுத்து, மாலத்தீவில் உள்ள மீனவர்களைத் தமிழக அரசு நிதி அளித்துக் காப்பாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "மாலத்தீவில் இது குறித்து விசாரணை நடைபெற இருக்கிறது. ஆகவே, தமிழக அரசு மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துகிறது.
மேலும், வெளியில் இருந்து எளிதாக யார் வேண்டுமானாலும் பேசி விடலாம். சட்டம் என்ற ஒன்று இருக்கிறது, நடைமுறை என்ற ஒன்று இருக்கிறது அந்த சட்டப்படிதான் அரசு செயல்பட முடியும். மத்திய அரசு முடியாது என்று சொல்லி விட்டார்கள் என்றால், அதன் பின் தமிழக முதல்வர் அந்த நடவடிக்கைகளை எடுப்பார்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம், நேற்றைய (நவ.7) தினம் திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "பாஜக ஆட்சிக்கு வந்தால்தானே, அது நடக்கப்போவதில்லை. பிறகு ஏன்? அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்து அறநிலையத்துறையின் கடைசி நாள்.. அண்ணாமலை ஆவேசம்!