தூத்துக்குடி: கோவில்பட்டி நகராட்சி பார்க் எதிரே தனலெட்சுமி உணவகம் செயல்பட்டுவருகிறது. நேற்றிரவு வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த அருண்குமார், பால்ராஜ், நாகராஜ், அஜித்குமார், சங்கரநாரயணன் ஆகியோர் உணவு உண்டுகொண்டிருந்தனர்.
அதேபோல் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த பிரசாத், சிவராமன், முருகன் ஆகியோர் அருகில் உணவு உண்டுகொண்டிருந்தனர். அருண்குமார், அவரது நண்பர்கள் வழக்கமாக இந்த உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம் என்பதால் அங்குப் பணிபுரியும் ஊழியருடன் சிரித்துப் பேசியுள்ளனர்.
அப்போது அருகில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பிரசாத், அவரது நண்பர்கள் தங்களைப் பார்த்துதான் அவர்கள் சிரிப்பதாக நினைத்து அவர்கள் அருண்குமார் அவரது நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். உணவகத்தில் இருந்த அனைத்துப் பொருள்களையும் வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சிறிது நேரத்தில் உணவகம் போர்க்களம் பூண்டதுபோல் காட்சியளித்தது.
இது குறித்து உணவகம் உரிமையாளர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, விரைந்து வந்த காவல் துறையினர் இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இருதரப்பினரும் கொடுத்த புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் சிசிடிவி காட்சியை ஆய்வுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இருதரப்பினர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ஈமு கோழி மோசடி- குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை; ரூ. 55 லட்சம் அபராதம்