நாட்டிலுள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக திகழ்கிறது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு, சீனா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பப்புவாநியூகினியா உள்ளிட்ட உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் நேரடியாக சரக்கு கப்பல் போக்குவரத்து மேற்கொள்ளப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகத்தில் முக்கிய இறக்குமதி பொருளாக நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் தொழில் நகரங்களாக திகழும் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள், இரும்பு தொழிற்சாலைகள், வேளாண் உரத் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான மூலப்பொருள்கள் ஏற்றுமதி-இறக்குமதி தூத்துக்குடி துறைமுகத்தையே சார்ந்திருக்கிறது.
இது தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருள்கள், தாதுமணல் மற்றும் உற்பத்தி பொருட்களும் தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாகத்தான் பரிமாறப்படுகிறது.
144 தடையால் முக்கியப் பணிகள் பாதித்துள்ள துறைமுகத்தில் கடந்த மாதத்தை காட்டிலும் 90 விழுக்காடு இறக்குமதி குறைந்துள்ளது. சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 3000-2000 டியூஸ் குறையாமல் அனுப்பப்படும் நிலையில் தற்போது 300 டியூஸ் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பிரதான தொழில்களான மீன்பிடித்தல், உப்பு உற்பத்தி போலவே தீப்பெட்டி தயாரித்தல், கடலைமிட்டாய் தயாரித்தல், வத்தல், விவசாயம், எண்ணெய் வித்துப்பயிர்கள், பனை மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்டவை செய்யப்படுகிறது. இதில் தீப்பெட்டி தொழிலுக்கு மூலப்பொருளான லீப் மரத்துண்டுகள் மங்கோலியா நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படுகிறது.
144 தடை உத்தரவு காரணமாக மரத்தடி இறக்குமதி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு தேவையான மரத்தடிகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள மரத்தடிகளை சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு கொண்டுச் செல்வதற்கு வாகன போக்குவரத்தும் நடைபெறாததால் மரத்தடிகளில் செய்த முதலீடுகள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
விளாத்திகுளம் விவசாயத்திற்கு பெயர் பெற்ற பகுதியாகும். இப்பகுதியில் வத்தல் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. இங்கு சாகுபடி செய்யப்பட்ட வத்தலை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கும் கரோனா தொற்று முடிவுக்கு வந்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள இழப்புகளை சீர்செய்யவும், துறைமுக பணிகள் மீண்டும் சீரான நிலையை எட்டவும் குறைந்தது 6 மாதம் ஆகும் என ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவன வல்லுநர் சந்திரசேகர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவால் முடங்கிய சிறு, குறு தொழில்கள்