தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (நவ.16) ஒரே நாளில் அதிகபட்சமாக 12 செ.மீ. மழை பதிவானது. இம்மாவட்டத்தில் இன்றும் (நவ.17) கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று வரை தொடர்ந்ததால் தூத்துக்குடி மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது. தூத்துக்குடி மாநகராட்சி முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்றும் கன மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த இடங்கள்
தூத்துக்குடி மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளான அரசு மருத்துவமனை, நீதிபதிகள் குடியிருப்பு, வி.இ.சாலை, பாளையங்கோட்டை சாலை, பழைய மாநகராட்சி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை வெள்ளம் வழிந்தோட வழியின்றி தேங்கியது. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார்.
மழை பாதிப்பை சீரமைப்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 20 தற்காலிக தங்கும் முகாம்களும், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றுவதற்காக 40 மோட்டார்களும் உடனடியாக வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பொதுவாக அக்டோபர் மாத தொடக்கத்தில் பெய்யத் தொடங்கும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு இரண்டு வாரம் தாமதமாக அக்டோபர் மாத இறுதியில்தான் பெய்ய தொடங்கியது.
தாமதமாக பருவமழை பெய்யத் தொடங்கியதைடுத்து விவசாயிகளும், உப்பு வியாபாரிகளும் அடுத்தக்கட்ட விளைச்சலுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்தனர். தற்போது தொடரும் மிக கன மழையினால் பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
பதிவான மழை அளவு
இயல்பாக சரியான காலக்கட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியிருந்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை 260.8 மி.மீ மழை பெய்திருக்கவேண்டும். தாமதமான பருவமழையால் நேற்று (நவ.16) வரை உள்ள நிலவரப்படி மாவட்டத்தில் 151.9 மி.மீ அளவு மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவை காட்டிலும் 42விழுக்காடு குறைவாகும்.
கடந்த 24 மணி நேர கணக்கை எடுத்துக்கொண்டால் நேற்று (நவ.16) மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் 100விழுக்காடு அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இயல்பாக 5.9 மி.மீ மழை பதிவாகும் என எதிர்பார்த்த நிலையில் 868 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (நவ.17) காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் சராசரியாக மொத்தம் 45.68 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
பகுதி வாரியாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீ) வருமாறு, திருச்செந்தூர் 14, காயல்பட்டினம் 52.2, குலசேகரன்பட்டினம் 35, விளாத்திகுளம் 23, கடல்குடி 13, வைப்பார் 47, சூரங்குடி 20, கோவில்பட்டி 73, கழுகுமலை 28, கயத்தாறு 49, கடம்பூர் 73, ஓட்டப்பிடாரம் 36, மணியாச்சி 34, வேடநத்தம் 15, கீழ அரசடி 11.5, எட்டயபுரம் 59, சாத்தான்குளம் 66.8, திருவைகுண்டம் 49.5, தூத்துக்குடி 169 மில்லி மீட்டர் முறையே மழை பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க:காட்டாற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்!