சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. நடிகை சில்க் ஸ்மிதா ஆந்திரா மாநிலத்தில் பிறந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். பல்வேறு மலையாள படங்களில் நடித்த பின் தமிழில் வண்டிச்சக்கரம் (1979) என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ’சில்க் ஸ்மிதா’ என பிரபலமாக அழைக்கப்பட்டார்.
பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ’அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. பின்னர் ’மூன்றாம் பிறை’, ’ரங்கா’, ’சகலகலா வல்லவன்’, ’மூன்று முகம்’, ’கோழி கூவுது’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா மார்க்கெட்டில் 1980 காலகட்டங்களில் உச்சத்தில் இருந்தார். மேலும் சில்க் ஸ்மிதா பல்வேறு படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அப்போது வெளியான படங்களில் இயக்குநர்கள் இவரது கவர்ச்சி பாடல்கள் இடம்பெற விரும்பியதுண்டு. இந்நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு சில்க் ஸ்மிதா உயிரிழந்தார். அவர் தனது ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகிறது.
இதையும் படிங்க: "2025இல் கடைசி திரைப்படம்".... சினிமாவில் இருந்து விடைபெறுவதாக பிரபல நடிகர் அறிவிப்பு!
இன்று சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. S.B விஜய் அமிர்தராஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு "சில்க் ஸ்மிதா – Queen of the South" என தலைப்பிடப்பட்டுள்ளது. ஜெயராம் சங்கரன் இயக்கும் இப்படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் சந்திரிகா ரவி நடிக்கிறார். அவரது பிறந்தநாளில் இந்த சிறப்பு அறிவிப்பைக் குறிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர். முன்னதாக பாலிவுட்டில் வித்யா பாலன் நடிப்பில் சில்க் ஸ்மிதாவின் பயோபிக் திரைப்படம் ’Dirty picture’ என்ற தலைப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது.