சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 9 மற்றும் 10 தேதிகளில் இரண்டு நாட்கள் மட்டும் நடத்தப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, "அலுவல் ஆய்வு கூட்டத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசித்தோம். அதன்படி வரும் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் சட்டசபை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர இருக்கிறார். பேரவையில் இரண்டாம் நாளன்று பல விவாதங்கள் நடைபெறும். மசோதாக்கள் நிறைவேற்றப்படும்,"என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "நீர்நிலைகளும், கால்வாய்களும் தூர்வாரப்படாததே வெள்ளத்துக்கு காரணம்"- பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் குற்றச்சாட்டு
இதனிடையே அலுவல் ஆய்வு குழு கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பேரவை கொறடா வேலுமணி, "சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 நாட்கள் பேரவை கூட்டத்தை நடத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தனர். ஆனால், அந்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை.
அதிமுக சார்பில் 10 முறையாவது இந்த கூட்டத்தை நடத்த சார்பில் வலியுறுத்தபட்டது. வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் பேச அதிக வாய்பளிக்க வேண்டும் என கேட்டு கொண்டோம். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்தபடவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு சொல்லும் அனைத்தையும் ஏற்று கொள்ள வேண்டிய விஷயம் இல்லை," என்றார். மழை வெள்ள பாதிப்புகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அதிமுக சார்பில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.