வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் விரிஞ்சிபுரம் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதால் போக்குவரத்து தடை பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியுற்றுள்ளனர்.
ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட தாக்கத்தால் வேலூர் மாவட்டத்தில் பரவலான கனமழை பெய்துள்ளது. இதனால் ஆகரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆறு பள்ளிகொண்டா அருகே பாலாற்றில் கலக்கிறது. இதன் காரணமாக விரிஞ்சிபுரம் வடுகந்தாங்கல் பகுதியை இணைக்கும் விரிஞ்சிபுரம் பாலாற்று தரைப்பாலம் உள்ளது. வெள்ளநீர் அளவு அதிகரித்து வருவதால் தரை பாலும் முழுவதுமாக மூழ்கி விடும் அபாயம் உள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் பாலத்தில் இருபுறமும் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இரும்பு தடுப்புகள் (பேரிகார்டு) வைக்கப்பட்டு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "சென்னைக்கு இன்னும் நிறைய மழை தேவைப்படுகிறது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருப்பம்!
விரிஞ்சிபுரத்தில் இருந்து இந்த பாலம் வழியாகத்தான் லத்தேரி,கே வி குப்பம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்ல வேண்டும். அதேபோல தாங்கள் பகுதியில் இருந்து வேலூருக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி விரிஞ்சிபுரம் சென்று அங்கிருந்து வேலூருக்கு செல்ல வேண்டும்.
பாலத்தில் செல்ல முடியவில்லை என்பதால் இப்பகுதி பொதுமக்கள் குடியாத்தம் வழியாக சென்று வேலூருக்கு வரவேண்டும் அல்லது காட்பாடி வழியாக சென்று குடியாத்தம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 30 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் எரிபொருள் செலவு அதிகரிப்பது மட்டுமின்றி, நேரமும் அதிகரி்ககிறது என்றும் மக்கள் கூறுகின்றனர். மேலும் அவசரத்துக்கு மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்காக உடனடியாக செல்ல முடியவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சிலர் ஆபத்தை உணராமல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோதும் கூட பாலத்தின் வழியே பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு பருவமழையின் போதும் இதே பிரச்னை நீடிப்பதால் தரைப்பாலத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும், மேலும் மழை காலத்தில் போக்குவரத்து தடைபடாமல் இருக்க இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.