இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பையடுத்து 144 தடை உத்தரவு கடந்த 19 நாள்களாக நாடு முழுவதும் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவதை தொடர்ந்து 144 தடை உத்தரவை மேலும் நீடிப்பதற்கான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகள் மக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்கவும், அத்தியாவசிய தொழில்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கும் மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இது தொடர்பாக, விசைப்படகு தொழிலாளர் சங்க தலைவர் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடும் மழை என்றாலும், காற்று என்றாலும் பாதிக்கப்படுவது மீனவர்கள்தான். தூத்துக்குடியில் மீன்பிடி தொழிலை மட்டும் நம்பியே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். தூத்துக்குடி துறைமுக தளத்தை தங்குதளமாக கொண்டு 360 விசைப்படகுகள் தொழில் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே தூத்துக்குடி துறைமுகத்தில் விசைப்படகுகள் 15 நாள்களுக்கும் மேலாக கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையைத் தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 19 நாள்களாக மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. எனவே கடந்த இருமாத காலமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரமானது பாதிக்கப்பட்டுள்ளது.
பல விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது படகை விற்றுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள உதவித் தொகை ஆயிரம் ரூபாய் மீனவர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தடை கால நிவாரணம் ஐந்தாயிரம் ரூபாயை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: இடைக்கால நிவாரணமாக ரூ. 10,000 வழங்க கோரிக்கை - புதுச்சேரி மீனவர்கள்