தூத்துக்குடி: 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை படி கூடுதலாக 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டு நிதி உதவியை வழங்கினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், ஆலை குறித்து விவாதங்களை ஆலை தரப்பும், ஆலைக்கு எதிரான கூட்டமைப்பினரும் சமூக ஊடகங்களில் பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றார். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வேலை வழங்குவது, இழப்பீட்டுத் தொகை வழங்குவது என அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாகவும், மீண்டும் பிரச்சனைகளை உருவாக்கும் வகையில் பொது மக்களிடம் தவறான தகவல்கள் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பை சார்ந்த நிர்வாகிகள் மட்டும் வரும் 12ஆம் தேதி கோரிக்கை மனு அளிக்க வரலாம் என்றும் கூட்டமாக வருவதை தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டிவிட்டரில் இருந்து டிரம்ப் நீக்கம் திட்டமிட்டு நடந்ததா?.. டிவிட்டர் பைல்ஸ் 3.0 வெளியீடு