தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ்(55), கடந்த மாதம் 25-ஆம் தேதி அலுவலகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். மணல் கொள்ளை விவகாரத்தில் நேர்மையாக செயல்பட்டதால் விஏஓ லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக முறப்பநாடு கலியாவூர் வேதகோயில் தெருவைச் சேர்ந்தவர்களான ராமசாமி மகன் ராமசுப்பிரமணியன் (எ) ராமசுப்பு ( வயது 41) மற்றும் முருகன் மகன் மாரிமுத்து ( வயது 31) ஆகியோரை முறப்பநாடு போலீசார் கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஜமால் கூறியதன் பேரில், காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜி-க்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், முறப்பநாடு கலியாவூர் வேதகோயில் தெருவைச் சேர்ந்தவர்களான ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.