தூத்துக்குடி: குமரிக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென்மாவட்டங்களில் பேய் மழை பெய்து, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் நீர் தேங்கியது மட்டுமில்லாமல் பல்வேறு கிராமங்கள் மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டன. அதன் பின் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, தற்போது நகரமும் மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.
வெள்ளத்தின் காரணமாகக் குடிநீர் ஆதாரங்களில் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் கிருமிகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் குடிநீரேற்று நிலையங்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் குளோரினைக் கலந்து விநியோகிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, “வெள்ளத்தின் காரணமாகக் குடிநீர் ஆதாரங்களில் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் கிருமிகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் குடிநீரேற்று நிலையங்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் குளோரினைக் கலந்து விநியோகிக்க, நுகர்வோருக்குக் சென்றடையும் குடிநீரில் உள்ள குளோரின் அளவினைக் கண்காணிக்கவும், குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, குளோரின் கலந்த குடிநீர் மட்டுமே பொதுமக்களுக்கு உள்ளாட்சிகளால் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இருப்பினும் குடிநீரேற்று நிலையங்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளிலிருந்து பொதுமக்களுக்குச் சென்றடையும். குழாய்களில் உள்ள சிறு சிறு துளைகள் மூலமாகவோ அல்லது பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும் இடங்களிலோ குடிநீரில் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், குடிநீர் ஆலைகளைக் கண்காணிக்கவும் உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில், குடிநீர் ஆலைகளில் தயார் செய்யப்படும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்படும் குடிநீரினை ஆலையின் உள் பகுப்பாய்வகம் மற்றும் தேசிய தரச்சான்று பெற்ற பகுப்பாய்வகத்தில் பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையினை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்டு 20 லிட்டர் கேன்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.குடிநீரை பாட்டிலில் அடைக்கும் போதோ அல்லது அவற்றின் விநியோகத்தின் போதோ அக்குடிநீரில் கிருமித்தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்காகச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அனைத்து வகைக் குடிநீரையும் நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்த பின்னர் பருக வேண்டும்.
குடிநீரில் குளோரின் கலக்காமல் விநியோகம் செய்யப்பட்டாலோ அல்லது குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதாகச் சந்தேகித்தாலோ சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்குத் தகவல் வழங்க வேண்டும். மேலும், சுத்திகரிக்கப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீரின் தரத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உணவு பாதுகாப்புத் துறை தொலைப்பேசி எண்ணுக்கு 9444042322 தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு வெள்ள பாதிப்புகளை 'தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பே இல்லை' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்