தேர்தல் நடைபெற இருப்பதை வாக்காளர்கள் நினைவில் கொள்ளும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கிவைத்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்பட்டுவருகின்றன.
கடந்த முறை வாக்குப்பதிவுகள் குறைவாக பதிவான இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திவருகிறோம். வாக்குப்பதிவை நினைவுறுத்தும் வகையில் ராட்சத பலூன் இன்று பறக்கவிடப்பட்டுள்ளது. இது மின் ஒளியிலும் ஒளிரும் வண்ணம் தூத்துக்குடி மாநகராட்சியில் பறக்கவிடப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.