தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விமான நிலையக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
நாடு முழுவதும் கோவிட்-19 காரணமாக மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், இந்தக் குழு கூட்டத்தில் அதன் முக்கிய உறுப்பினர்களான தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இந்தியக் கடலோர காவல்படை, இந்திய விமானப்படை முக்கிய அலுவலர்கள் அனைவரும் காணொலி அழைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு கூடுதலாகத் தேவைப்படும் காவலர்கள், விமான நிலைய நுழைவு எல்லையில் புறக்காவல் நிலையம் அமைப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, அவை குறித்து முறையாக ஆய்வு செய்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்தார்.
மேலும், விமான நிலைய எல்லைக்குள் பறவைகள் விமானத்தில் மோதி விபத்து ஏற்படுத்துவதைத் தடுக்க விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் குப்பைகள், மாமிசக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பது, கட்டடங்கள் கட்டுவதற்கு முன் விமான நிலையத்தில் தடையில்லாச் சான்றிதழ் பெறுவது, திடக்கழிவு மேலாண்மை ஆகியவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இவற்றின் பேரில், இன்று (ஆக. 28) தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விமான நிலையத்தை நேரில் ஆய்வு செய்தார். இதில், அவர் விமான நிலைய முனையம், ஓடுதளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்து, கூடுதலாக தேவைப்படும் அளவு காவலர்களை பணிக்கு அமர்த்துவதாக உறுதியளித்தார். மேலும் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கான இடமும் முடிவு செய்யப்பட்டது.