தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இங்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டுவந்தன. தற்போது, இரவு நேரத்திலும் விமானப் போக்குவரத்தை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு தூத்துக்குடி விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரங்களில் விமானங்களை இயக்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக 2.5 கோடி ரூபாய் செலவில் விமான ஓடுபாதையை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட எட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்தாண்டு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இரண்டு லட்சத்து 36 ஆயிரம் பயணிகள் வந்துசென்றுள்ளனர்.
தற்போது, 24 மணி நேரமும் விமானங்கள் இயக்கப்படுவதன் மூலம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள் பெருமளவில் பயனடைவார்கள். மேலும், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் சர்வதேச அளவில் 321-ரக விமானங்களையும் தூத்துக்குடி விமான நிலையத்தில் கையாள முடியும்.
ஓடுபாதையை 3,115 மீட்டராக உயர்த்துவது, ஒரே நேரத்தில் 600 பயணிகள் வந்துசெல்லும் வகையில் பயணிகள் முனையத்தை 10,800 மீட்டர் சதுரப் பரப்பளவிற்கு விரிவாக்குதல் உள்ளிட்ட பணிகள் 380 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு கட்ட விரிவாக்கப் பணிகளில், ஓடுபாதையை விரிவாக்கும் பணிக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டதால் விரைவில் பணி தொடங்கப்படும். தூத்துக்குடி விமான நிலையத்தை ஒட்டி இந்தியக் கடற்படை, இந்தியக் கடற்படையின் விமானங்களுக்கான இயங்கு தளம் அமைக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தமிழர்களின் மருத்துவக் குறிப்புகளுடன் தயாராகும் முகக்கவசத்துக்கு பெருகும் வரவேற்பு!