தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில் அம்மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். அங்கு விவசாயிகள் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆட்சியரிடம் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டார்.
அப்போது, குடிமராமத்து பணிகளில் முறைகேடு நடப்பததாக கூறி விவசாயிகள் திடீரென்று தங்களது கைகளில் இரும்பு சங்கிலியால் கட்டி வரிசையாக பதாகைகளை ஏந்தி ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி மதிமுக விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், தூத்துக்குடியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளில் ஆளும்கட்சியினர், விவசாயிகள் என்ற போர்வையில் மாவட்ட ஆட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் முறைகேடு செய்து வருகின்றனர். விவசாய நிலங்களில் குளங்களை தூர்வாரும் பேரில், சவுடு மண் அகற்றுவதாக கூறி மணல் கொள்ளை அடிக்கப்படுகிறது. அதனால் இதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் மதிமுக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.