தூத்துக்குடி செய்துங்கநல்லூர் பகுதி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இவருடைய மகன் அபிமணி என்ற திலீப் (21). இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவந்தார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உய்காட்டான் கோயில் கொடை விழாவின் வரவு செலவு கணக்குத் தொடர்பாக இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சப்பானி மகன்கள் குமார் (40), ஆனந்தராஜ் (எ) காமராஜ் (35) ஆகியோர்களிடம் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பிரச்னையில் குமார், ஆனந்தராஜை அரிவாளால் தாக்கி அபிமணி கொலைசெய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் அபிமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் எச்சரித்து அனுப்பப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அபிமணி மீதிருந்த முன்விரோதம் காரணமாக குமார், ஆனந்தராஜ், அவரது உறவினரான ஆண்ட்ரூஸ் என்ற ஸ்டீபன் ஆகியோர் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டிவந்துள்ளனர். ஒருநாள் கல்லூரி மதிய உணவு இடைவேளையின்போது வீட்டிற்குச் சாப்பிட இருச்சக்கர வாகனத்தில் வந்த அபிமணியை வழிமறித்து, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இந்தச் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பட்டப்பகலில் பயங்கரம்: செய்துங்கநல்லூர் அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை
இது குறித்து அபிமணியின் தந்தை தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின்பேரில் செய்துங்கநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குமார், ஆனந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 'சாலையில் நின்று பேசியது குற்றமா?' - தூத்துக்குடியில் மூவருக்கு நடந்த அரிவாள்வெட்டு!