திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தின் தொடக்க விழா நாளை நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் கொண்டு வந்ததே திமுகதான். 2006ஆம் ஆண்டு ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
அந்தந்த காலத்திற்கு ஏற்ப சட்டதிட்டங்களை மாற்றி கொள்ளலாம் என்ற அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பதுதான் விந்தையாக உள்ளது. ஸ்டாலின் கொண்டு வந்தால் சரி என்பார்கள், நாங்கள் கொண்டு வந்தால் தவறு என்கிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தன்னாட்சி அமைப்பான மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும். பொங்கல் பரிசு உயர்த்தி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை, இருந்த போதும் உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், 2021ஆம் அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அதிசயம் நிகழும் என்று எதைப் பற்றி கூறுகிறார் என்பது தெரியவில்லை. 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி மலரும் என்பதைத்தான் அதிசயம் நிகழும் என்று கூறியிருக்கலாம். ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்கவில்லை தொடங்கிய பிறகு கருத்து தெரிவிக்கிறேன் என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: அமமுக - சமாஜ்வாடி பார்வர்ட் பிளாக் கூட்டணி அறிவிப்பு!