தூத்துக்குடி: தமிழ் கடவுள் முருகபெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசம் திருவிழா விமரிசையாக் கொண்டாடப்பட்டது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தைப்பூசம் திருவிழாவான இன்று கோயில் நடை அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், இராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.
பக்தர்கள் மாலை அணிவித்தும், விரதம் இருந்து காவடி எடுத்தும், அலகுவேல் குத்தியும், ஆண்டிக்கோலத்திலும் பாதயாத்திரையாக வந்து கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்ததால் கோயில் விழாக் கோலம் பூண்டுள்ளது. மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: தாயார் இறப்புக்கு சென்று திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! நடந்தது என்ன?