தூத்துக்குடி: திருச்செந்தூர் தெப்பக்குளம் அருகில் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார் தலைமையிலான காவலர்கள், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பைக்கை வழி மறித்து சோதனை நடத்தினர்.
அதில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததும், பைக்கை ஓட்டி வந்தவர் காயல்பட்டினம் உச்சிமகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஷேக் முகமது(38) என்பதும் தெரிய வந்தது. அதேநேரம், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.
பின்னர் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், அந்த பைக் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து முகமது-ஐ கைது செய்த காவல்துறையினர், பைக்கை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவர் திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் திருடிய நான்கு பைக்கை காயல்பட்டினம் சுனாமி நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கோவில் காவல்துறையினர் பறிமுதல் செய்து சேக் முகமது-ஐ சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: Video First on ETV: அண்ணா சாலையில் நடந்த வழிப்பறி சிசிடிவி காட்சிகள்